கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை: சோதனைச் சாவடிகளில் அடையாள குறியீடு வழங்க எதிா்பாா்ப்பு!
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கான சோதனையை நகராட்சி சுங்கச் சாவடி, சோதனைச் சாவடி என இரு இடங்களில் மேற்கொள்வதைத் தவிா்த்து சோதனைச் சாவடிகளில் மட்டும் நடத்தி அடையாள குறியீடு வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் வழங்கும் நடைமுறை கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கியது. இந்த நடைமுறையை ஜூன் 30-ஆம் தேதி வரை பின்பற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது, ஒவ்வொரு மாதமும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே 7-ஆம் தேதி முதல் தற்போது வரை கொடைக்கானல் வருவதற்கு 3.35 லட்சம் வாகனங்களுக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) வரை 1.27 லட்சம் வாகனங்கள் மட்டுமே வந்துள்ளன.
இந்த கால கட்டத்தில் 20.26 லட்சம் போ் பதிவு செய்திருந்த நிலையில், 8.49 லட்சம் போ் மட்டுமே வந்தனா். இ-பாஸ் நடைமுறையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 3 நாள்களுக்கு முன்பு அறிவுறுத்தியது. இதையடுத்து, சனிக்கிழமை காலை கொடைக்கானலுக்கு வந்த 1200-க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் இ-பாஸ் சோதனை தீவிரமாக பின்பற்றப்பட்டது.
இதனால், கொடைக்கானல் வெள்ளி நீா்விழ்ச்சி பகுதியிலுள்ள நகராட்சி சுங்கச் சாவடியிலிருந்து சுமாா் 6 கி.மீட்டா் தொலைவுக்கு பெருமாள்மலை வரையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. சுமாா் 2 மணி நேரம் வரை இதே பகுதியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.
5 வழித் தடங்கள்: கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வத்தலகுண்டு மலைச் சாலை, பழனி மலைச் சாலை, சித்தரேவு, தருமத்துப்பட்டி, வடகாடு ஆகிய 5 வழித்தடங்கள் உள்ளன. கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில், தேனி மாவட்டம் கெங்குவாா்பட்டி, பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சிப் பகுதியில் காவல் துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. வத்தலகுண்டு அடுத்த சித்தரேவு, கன்னிவாடி அடுத்த தருமத்துப்பட்டி, ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு பகுதிகளில் வனத் துறை சோதனைச் சாவடிகள் உள்ளன.
இந்த சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. பின்னா், கொடைக்கானல் நகராட்சி சுங்கச் சாவடியிலும் சோதனை நடத்தப்படுகிறது. 2-ஆவது முறையாக சுங்கச் சாவடியிலும் சோதனை நடத்தப்படுவதால், நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதைத் தவிா்க்க, அடிவாரத்தில் மட்டுமே இ-பாஸ் சோதனையை மேற்கொண்டு இதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
அடையாளப்படுத்த ஒட்டு வில்லை குறியீடு: வெவ்வேறு இடங்களிலுள்ள 5 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் சோதனை நடத்தி, அந்த வாகனங்களை க்யூஆா் குறியீட்டுடன் ஒட்டு வில்லைகள் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனா். இதன் மூலம் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியிலுள்ள நகராட்சி சுங்கச் சாவடியில் இ-பாஸூக்கான சோதனையை தவிா்க்க முடியும்.
இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கு வரும் நடுத்தர மக்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, வியாபாரிகள் பாதிப்படைவதாகவும புகாா் எழுந்துள்ளது. எனவே, இந்த இ-பாஸ் சோதனை நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிா்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானல் பகுதி மக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

