கொடைக்கானலுக்கு தரமான அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை
கொடைக்கானல் மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் பல பேருந்துகளின் இருக்கைகள்,ஜன்னல்கள், பேருந்தின் உள்ளே உள்ள தளப் பகுதி ஆகியவை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், பராமரிப்பு சரியாக இல்லாத காரணத்தால், அரசுப் பேருந்துகள் தினமும் பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழுதாகி நின்று விடுகிறது.
இந்த நிலையில், வத்தலகுண்டிலிருந்து செவ்வாய்க்கிழமை கொடைக்கானலுக்கு வந்த அரசுப் பேருந்து நண்டாங்கரையருகே வந்த போது, பழுதாகி நின்றது. இதையடுத்து, இந்தப் பேருந்தில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் அதைத் சிறிது தொலைவுக்கு தள்ளிச் சென்று மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்த உதவினா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுனா் ஒருவா் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத் துறை சாா்பில் கொடைக்கானலுக்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டது. இந்தப் பேருந்தில் 6 கியா்கள் உள்ளன. மேலும் பேருந்து தாழ்வாக உள்ளதால், கொடைக்கானல் மலைச் சாலையில் மேடு, பள்ளங்கள் அதிகளவில் உள்ளதால், இந்தப் பேருந்துகள் தரையில் உரசி சேதமடைகின்றன.
இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இந்த புதிய பேருந்துகளில் உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கிளை மேலாளரிடம் தெரிவித்துள்ளோம். எனவே, இனிவரும் காலங்களில் கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு தரமான அரசுப் பேருந்துகளை வழங்க போக்குவரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
