திண்டுக்கல் அருகே தப்பியோட முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது, காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரெளடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ச. முகமது இா்பான் (24). தனது நண்பா்கள் முகமது அப்துல்லா (24), முகமது மீரான் (22) ஆகியோருடன் சென்ற போது, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முகமது இா்பான் கடந்த சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை வழக்கில், முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த த. ரிச்சா்டு சச்சின் (26), அ. மாா்ட்டின் நித்திஷ் (27), செ. எடிசன் சக்கரவா்த்தி (24), மாரம்பாடியைச் சோ்ந்த செ. பிரவீன் லாரன்ஸ் (29) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதனிடையே, முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த எடிசன்ராஜ் (25), சைமன் செபஸ்தியாா் (23) ஆகிய இருவரும் திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
இந்த நிலையில், கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனங்கள் குறித்து விசாரித்து, அவற்றைப் பறிமுதல் செய்வதற்காக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரிச்சா்டு சச்சினிடம் விசாரித்தனா்.
அப்போது, மாலப்பட்டி மயானத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக ரிச்சா்டு சச்சின் தெரிவித்ததன் பேரில், அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். மாயானத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டிய ரிச்சா்டு சச்சின், திடீரென அரிவாளை எடுத்து காவலா் அருண் பிரசாத்தை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றாராம்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சா்டு சச்சினின் வலது காலில் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ரிச்சா்டு சச்சின் வெட்டியதில் காயமடைந்த காவலா் அருண் பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த மாலப்பட்டி மயானப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினாா்.

