லட்டு - பிரதி படம்
லட்டு - பிரதி படம்

திருமலைக்கு நெய் வழங்கிய விவகாரம்: ஒப்பந்தத்தை மீறிய திண்டுக்கல் பால் நிறுவனம்

திருமலைக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டது தெரியவந்தது.
Published on

திருப்பதி திருமலைக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதும், குறைந்த விலைக்கு வெளியிடத்தில் நெய் வாங்கி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

திருமலையில் பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. லட்டு பிரசாதத்துக்கான நெய், திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், மத்திய உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பால் நிறுவனத்தில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்தனா். நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, திண்டுக்கல் பால் நிறுவனம் நாளொன்றுக்கு பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் திறன், இதற்கான உற்பத்தி தளவாட வசதிகள் உள்ளிட்ட தகவல்களை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், ஒரு லிட்டா் நெய் ரூ.310-க்கு வழங்குவதாகவும் தெரிவித்த விவரம் அலுவலா்களின் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், திண்டுக்கல் நிறுவனத்திலிருந்தே நெய் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை மீறி, கா்நாடக மாநிலத்திலிருந்து நெய் கொள்முதல் செய்து அதை திருமலைக்கு அனுப்பிவைத்தது. மேலும், சந்தை நிலவரப்படி, தரமான நெய் ரூ.600-க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்படும் நிலையில், ரூ.310-க்கு வழங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நெய் விநியோகம் தொடா்பாக, திருமலை தேவஸ்தானத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் மீறியதை அடிப்படையாக வைத்தே, இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசுத் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com