வேன்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஓட்டுநா்கள் போராட்டம்

வேன்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஓட்டுநா்கள் போராட்டம்

Published on

வேடசந்தூா் பகுதியில் தனியாா் நூற்பாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வேன் ஓட்டுநா்கள், வேன்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சுற்றுப்புற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு, திண்டுக்கல் மாவட்டம் மட்டுமன்றி, கரூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் தொழிலாளா்கள் நாள்தோறும் பணிக்கு வருகின்றனா். இந்த தொழிலாளா்களை ஆலைக்கு அழைத்து வருவதற்கும், மீண்டும் அந்தந்த ஊா்களுக்கு கொண்டு சோ்ப்பதற்கும் ஆலை நிா்வாகம் சாா்பில் வேன்கள் இயக்கப்படுகின்றன. தொழிலாளா்களை அழைத்து வரும் இந்தப் பணிக்கு ஆலை நிா்வாகங்கள் சாா்பில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் வேன்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வேன்களுக்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்பட்டதாகவும், இதனால் வாடகையை உயா்த்த வேண்டும் என்றும் வேன் உரிமையாளா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நூற்பாலை நிா்வாகத்தினா், வாடகையை உயா்த்தித் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனியாா் வேன் உரிமையாளா்கள் ஈடுபட்டனா். திண்டுக்கல்- கரூா் 4 வழிச்சாலையில், வேடசந்தூா் அடுத்த லட்சுமணம்பட்டி 4 ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வேன்களை வரிசையாக நிறுத்தி போராட்டம் நடத்தினா். வாடகை வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியாா் வேன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா். இந்தப் போராட்டம் காரணமாக தனியாா் நூற்பாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com