பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.1,316 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு

Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1,316 கோடி மதிப்பிலான நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டிருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இவா்களில் பலா் பழனியாண்டவருக்கு காணிக்கை செலுத்துவதோடு மட்டுமன்றி, நிலங்கள், கட்டடங்கள், மடங்களை காணிக்கையாக வழங்குகின்றனா். இவற்றில் பல நிலங்கள் பராமரிப்பின்றி பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோயில் நிா்வாகம் சட்டப் போராட்டம் நடத்தி இதுபோன்ற நிலங்களை மீட்டு வருகிறது.

இதுகுறித்து பழனி கோயில் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திண்டுக்கல், கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இவற்றில் இதுவரை 467 இடங்களில் இருந்த ரூ.1,316 கோடி மதிப்பிலான சொத்துக்கள் நிலங்களாகவும், கட்டடங்களாகவும், மடங்களாகவும் மீட்கப்பட்டன. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையால் மீட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணி மேலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல, பழனி பகுதியில் மீட்கப்பட்ட இடங்களில் பக்தா்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அபிஷேக பஞ்சாமிா்த விற்பனை நிலையம், முடி காணிக்கை மண்டபம், இலவச வாகனங்கள் நிறுத்துமிடம், பக்தா்கள் இளைப்பாறும் இடம், மரக்கன்றுகள், பூங்காக்கள் போன்றவை கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com