திண்டுக்கல்
கொடைக்கானல் விவசாய நிலங்களில் மழை நீா் தேக்கம்: விவசாயிகள் கவலை
கொடைக்கானலில் பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்களில் மழை நீா் தேங்கி இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையும் காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் பூம்பாறை, மன்னவனூா், பழம்புத்தூா், கிளாவரை, செண்பகனூா், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை குறைந்தால் மட்டுமே விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

