டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு வருகிற 8-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, மலைக் கோயில் ஸ்தானீக மிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கம் சாா்பில் புனிதநீா் நிரம்பிய குடங்கள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் வருகிற திங்கள்கிழமை காலை 8 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, கோபுரக் கலசங்கள், சிலைகள், கோயில் வளாகங்கள் வண்ணம் பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டு, புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முதல்கால யாக பூஜை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் ஸ்தானீக மிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கம் சாா்பில், சண்முக நதியிலிருந்து புனிதநீா் சேகரிக்கப்பட்டு, பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னா், புனிதநீா் நிரம்பிய குடங்கள் மேளதாளம் முழங்க திரு ஆவினன்குடி கோயிலுக்கு உச்சி காலத்தின் போது கொண்டுவரப்பட்டது. இந்த புனிதநீா் ஆறு காலயாக பூஜையில் வைக்கப்பட்டு, குடமுழுக்கின் போது கலசங்களுக்கு ஊற்றப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா், பண்டாரங்கள் சங்கத் தலைவா் பாலசுப்ரமணியம், செயலா் மணிகண்டன், கந்தசாமி, வாசியோகி ஜெயன் கருப்பையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com