பழனியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலுக்கு செல்லும் வழியில் பழனி தண்டபாணி மடம் என்று சுமாா் 1.40 ஏக்கரில் இடம் உள்ளது. இந்த இடம் தொடா்பாக கோயில் நிா்வாகத்துக்கும், தனிநபா்களுக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இந்த தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் இந்த இடம் பழனி கோயிலுக்கு சொந்தமானது என தீா்ப்பளித்தது. இதையடுத்து, இந்த இடத்திலிருந்த 16 கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், கடைகள் அகற்றப்படாததால் வெள்ளிக்கிழமை இணை ஆணையா் மாரிமுத்து, பழனி காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், ஆய்வாளா் மணிமாறன், கோயில் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் கடைகளை இடிக்க வந்தனா்.
அப்போது, கடைக்காரா்கள் இடிக்க விடாமல் கோயில் பணியாளா்களுடன் வாக்குவாதம் செய்தனா். இதையடுத்து ,காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்ட்டது.
