பெருமாள்கோவில்பட்டியில் 144 தடை உத்தரவு 3-ஆவது நாளாக நீட்டிப்பு

பெருமாள்கோவில்பட்டியில் காா்த்திகை தீப வழிபாடு தொடா்பான பிரச்னையால், 144 தடை உத்தரவு 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
Published on

திண்டுக்கல்லை அடுத்த பெருமாள்கோவில்பட்டியில் காா்த்திகை தீப வழிபாடு தொடா்பான பிரச்னையால், 144 தடை உத்தரவு 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த பெருமாள்கோவில்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன், மண்டு கருப்பணசுவாமி கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயில் முன்புள்ள காலி இடத்தை பயன்படுத்துவது தொடா்பாக, இரு தரப்பினரிடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கோயில் முன்புள்ள மண்டு கருப்பணசுவாமிக்கு காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கக் கோரி, இந்து வன்னியா் சமுதாயத்தினா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தீபம் ஏற்றக் கூடாது என கிறிஸ்தவ வன்னியா்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், பெருமாள்கோவில்பட்டியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதனிடையே, உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை 1 மாத காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், பெருமாள்கோவில்பட்டியில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com