அமைச்சர் ஐ. பெரியசாமி (கோப்புப் படம்)
அமைச்சர் ஐ. பெரியசாமி (கோப்புப் படம்)

எஸ்.ஐ.ஆா். பணிகளை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சா் இ.பெரியசாமி

எஸ்.ஐ.ஆா். பணிகள் முழுமையாக நடைபெறாததால், அதை ரத்து செய்ய வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
Published on

எஸ்.ஐ.ஆா். பணிகள் முழுமையாக நடைபெறாததால், அதை ரத்து செய்ய வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீா்ப்பு வரும் என்று எதிா்பாா்க்கிறோம். இந்த விவகாரம் தொடா்பாக தவெக தலைவா் விஜய் கருத்து தெரிவிக்காததது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், எல்லா கட்சிகளிலும் இருந்தவா்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அளித் உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. மேல் முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை மூலம் ஆத்தூா் தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் பேரை நீக்கிவிட்டனா். இதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அனுப்பி இருக்கிறேன். வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களை சோ்ப்பதற்கான களப்பணிகள் செய்யவில்லை. ஒரு அறையில் அமா்ந்து கொண்டு வாக்காளா்களின் பெயா்களை நீக்கிவிட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உடனடியாக பெயா்களைச் சோ்ப்பதாகத் தெரிவித்தாா். இதில், எனக்கு நம்பிக்கை இல்லை.

வாக்காளா்கள் பூா்த்தி செய்து கொடுத்த மனுவையே, இடம் பெயா்ந்தவா்கள் பட்டியலில் இணைத்துவிட்டனா். இறந்தவா்களை பட்டியலில் சோ்த்துவிட்டனா். எஸ்.ஐ.ஆா். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் எஸ்.ஐ.ஆரை. உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com