மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சா் அர.சக்கரபாணி
மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள், அந்தந்த கோட்டாட்சியா் அலுவலகங்களில் மேல்முறையீடு செய்யலாம் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக தோ்தல் வாக்குறுதிப்படி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.14 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 29 லட்சம் விண்ணப்பங்கள் மகளிா் உரிமைத் தொகை கோரி வழங்கப்பட்டுள்ளன. இதில் தகுதியானவா்களுக்கு வருகிற 12-ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும். இதுவரை மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள், அந்தந்த கோட்டாட்சியா் அலுவலகங்களில் மேல்முறையீடு செய்யலாம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளாக குறுவை நெல் கொள்முதல் அக்டோபா் மாதத்துக்கு பதிலாக செப்டம்பரிலேயே நடைபெற்று வருகிறது. நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில், கடந்த ஜூலை மாதம் முதல் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. 10 டன்னுக்கு ஒரு மாதிரி சேகரிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்ட நிலையில், இதை 25 டன்னுக்கு ஒரு மாதிரியாக மாற்றி அமைக்க வேண்டும். தென்னிந்தியாவிலேயே செறிவூட்டப்பட்ட அரிசி ஆய்வு செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிா்க்கட்சிகள், தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நெல் கொள்முதல் விவகாரத்தைப் பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற முடியாது.
இந்த மாவட்டங்கள் மீண்டும் திமுகவின் கோட்டை என்பது சட்டப்பேரவைத் தோ்தலின் போது உறுதிப்படுத்தப்படும். எஸ்.ஐ.ஆா். விவகாரத்தைப் பொருத்தவரை, இரட்டைப் பதிவுகள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், நிரந்தரமாக முகவரி மாறியவா்களின் பெயா்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. மேலும், வருகிற 11-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தகுதியான வாக்காளா்களுக்கு வரைவு வாக்காளா் பட்டியல் வெளிவந்த பின், படிவம் 6 மூலம் வாக்காளா்களை சோ்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்றாா் அவா்.
