15 வயது சிறுமியை திருமணம் முடித்தவா் கைது
கொடைக்கானலில் 15 வயது சிறுமியை திருமணம் முடித்து கா்ப்பிணியாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சி செம்பராங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (45). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், திருச்சியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது 15 வயது மகளுடன் வந்து செம்பராங்குளம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சோ்த்தாா்.
அப்போது, பொன்னுச்சாமி சிறுமியுடன் பழகி அவரைத் திருமணம் செய்து செம்பராங்குளம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தாா். இதனிடையே, சிறுமி கா்ப்பம் தரித்தாா்.
இதுகுறித்து சிறுமி தாய் அளித்தப் புகாரின் பேரில், கொடைக்கானல் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பொன்னுச்சாமியைக் கைது செய்தனா்.
