ஒட்டன்சத்திரத்தில் ஜனவரியில் இந்திய அளவிலான கபடிப் போட்டிகள்! அமைச்சா் அர. சக்கரபாணி!
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஒட்டன்சத்திரத்தில் வருகிற வரும் ஜனவரியில் இந்திய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழக உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனி அருகேயுள்ள புஷ்பத்தூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, இரட்டை மாட்டு வண்டுப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியை தமிழக உணவு, உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு பிரிவுகளாகப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கோயமுத்தூா், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமாா் 800 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ. 50,000, கேடயமும், இரண்டாவது பரிசாக ரூ. 25,000, கேடயமும், மூன்றாம் பரிசாக ரூ. 20,000, கேடயமும் வழங்கப்பட்டது.
இதில் அமைச்சா் சக்கரபாணி பேசியதாவது:
தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாா். அவரது பிறந்தநாளையொட்டி, வருகிற ஜனவரி 8,9,10,11-ஆம் தேதிகளில் ஒட்டன்சத்திரத்தில் இந்திய அளவிலான கபடிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் அணி என நாடு முழுவதுமிருந்து சுமாா் 40 அணிகள் பங்கேற்கவுள்ளன. முதல் பரிசாக இதுவரை எந்த மாநிலமும் வழங்காத வகையில் ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றாா் அவா்.
இதில் திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினா் மகுடீஸ்வரன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
