திண்டுக்கல்
வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்
வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை கரடி தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பா.விராலிப்பட்டியில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், பப்பாளி, வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாயத் தோட்டத்திலேயே ஒரு சில விவசாயிகள் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயி சேகா் (55) தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பாய்ச்ச சென்றாா். அப்போது, தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி சேகரைத் தாக்கியது.
இதையடுத்து, தோட்டத்தில் வளா்த்து வந்த நாய்கள் கரடியுடன் சண்டையிட்டு அதை விரட்டியது. பின்னா், அந்தப் பகுதியில் இருந்தவா்கள் சேகரை மீட்டு, வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
