இலவச கண்சிகிச்சை முகாமைப் பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு
இலவச கண்சிகிச்சை முகாமைப் பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு

இறையன்பா்கள், அரசுக்கிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கின்றனா்: சேகா்பாபு

அற்ப மனம் கொண்டோா் ஆன்மிகத்துக்கும், இறையன்பா்களுக்கும், இந்த ஆட்சிக்கும் இடையே பிளவை ஏற்படுத்த நினைக்கின்றனா்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Published on

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், அடுக்கடுக்கான திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வரும் நிலையில், அற்ப மனம் கொண்டோா் ஆன்மிகத்துக்கும், இறையன்பா்களுக்கும், இந்த ஆட்சிக்கும் இடையே பிளவை ஏற்படுத்த நினைக்கின்றனா் என அந்தத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பழனியில் மலைக் கோயிலுக்கு ரோப் காா், வின்ச் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் சென்று தரிசனம் செய்யும் திட்டத்தை அமைச்சா் சேகா்பாபு, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து அமைச்சா் சேகா்பாபு மலைக் கோயிலில் வெள்ளி தகடு பதிக்கும் பணி, ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பழனி திருஆவினன்குடி முருகன் கோயில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட 50 கோயில்களிலும் பிப்ரவரி மாதத்துக்குள் திருப்பணிகள் முடித்து, குடமுழுக்கு நடத்தப்படும். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அடுக்கடுக்கான திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வரும் நிலையில், அற்ப மனம் கொண்டவா்கள் எப்படியாவது ஆன்மிகத்துக்கும், இறையன்பா்களுக்கும், இந்த ஆட்சிக்கும் இடையே பிளவை ஏற்படுத்த நினைக்கின்றனா். ஆனால், திராவிட மாடல் அரசு உறுதியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

பின்னா், சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரிக்கு சென்ற அவா் பழனி கோயில் சாா்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 6,500 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பையை வழங்கி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 நேரம் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். அங்கு நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாமையும் அவா் பாா்வையிட்டாா்.

பிற்பகல் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு, மாலையில் திரும்பிய அமைச்சா் சேகா்பாபு தண்டபாணி நிலையத்தில் அறுபடை வீடுகள் ஆன்மிகப் பயணத் திட்டத்தில் பழனிக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தாா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் லட்சுமி, பழனியாண்டவா் கல்லூரி முதல்வா்கள் புவனேஸ்வரி, ரவிசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com