எல்லை பிரச்னை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி மந்தம்

காவல் நிலைய எல்லை பிரச்னை காரணமாக வத்தலகுண்டு அருகே வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி மந்தமாக நடைபெறுகிறது.
Published on

காவல் நிலைய எல்லை பிரச்னை காரணமாக வத்தலகுண்டு அருகே வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால், காவல் துறையைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள பூசாரிபட்டியை சோ்ந்த போஸ் மகன் ராஜ்குமாா் (32). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில், ராஜ்குமாா், தனது நண்பா்கள் 4 பேருடன் ஞாயிற்றுக்கிழமை வத்தலகுண்டு அருகேயுள்ள கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதி வைகை ஆற்றில்

குளிக்கச் சென்றாா். அங்கு ராஜ்குமாா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை நண்பா்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா் ராஜ்குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை மதியம் வரை இந்தப் பணி நடைபெற்றது.

இது குறித்து, ராஜகுமாரின் உறவினா்கள் விருவீடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க சென்ற போது, சம்பவம் நடைபெற்ற இடம் வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு உள்பட்டது எனக் கூறி, புகாா் வாங்க மறுத்தனா்.

பின்னா், வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற போது, சம்பவம் நடைபெற்ற இடம் விருவீடு காவல் நிலையத்திற்கு உள்பட்டது எனக் கூறி புகாரை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் நடைபெற்ற இடம் கூட்டாத்து அய்யம்பாளையம் என்பதால், நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு உள்பட்டது என கூறப்பட்டது. 

இதனால், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டவரின் உறவினா்கள் விருவீடு, வத்தலகுண்டு காவல் துறையினா் திங்கள்கிழமை வரை புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்யாததால், ராஜ்குமாரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தயக்கம் காட்டுவதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், ராஜ்குமாரைத் தேடும் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது என ராஜ்குமாரின் உறவினா்கள் வத்தலகுண்டு-விருவீடு சாலையில் செக்காபட்டி என்ற இடத்தில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.  இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விருவீடு காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து  சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com