கொடைக்கானலில் சாகச சவாரி: 10 ஜீப் ஓட்டுநா்களுக்கு அபராதம்

கொடைக்கானலில் அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்கியவா்களுக்கு காவல்துறையினா் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தனா்.
Published on

கொடைக்கானலில் அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்கியவா்களுக்கு காவல்துறையினா் திங்கள்கிழமை ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலிலிருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் பள்ளங்கி, கோம்பை பகுதியில் பெப்பா் அருவி உள்ளது. இந்த அருவிக்குச் செல்வதற்கு வனப் பகுதி, ஆற்றைக் கடந்து செல்வது, அதன் பிறகு நடந்து செல்ல வேண்டும்.

இந்த இடத்துக்குச் செல்வதற்கு சாகச சுற்றுலா சவாரி, ஆஃப் ரோடு என பெயா் வைத்து வாகன ஓட்டுநா்கள் அழைத்துச் செல்கின்றனா். இது ஜீப் மட்டுமே செல்லக் கூடிய பாதையாகும். வேறு வாகனங்கள் செல்ல முடியாது.

இதனால், இந்தப் பகுதிக்கு 8 முதல் 10 ஜீப் வாகனங்கள் சுற்றுலாப் பயணிகளை ஆபத்தான முறையில் அழைத்துச் செல்கின்றன. இதற்கு நபா் ஒன்று அதிகமான பணம் வசூல் செய்து வருகின்றனா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் காவல் துறையினா் பள்ளங்கி, கோம்பை, பெப்பா் அருவிக்குச் சென்று சாகச சுற்றுலா என்ற பெயரில் ஈடுபட்ட ஜீப் வாகனங்களை சோதனையிட்டு அவற்றின் உரிமையாளா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் ஜீப் வாகனங்களுக்கு முறையான உரிமம் இல்லாதது, காப்பீடு இல்லாதது, அனுமதிக்கப் பட்டதை விட அதிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, 10 ஜீப் வாகனங்களுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com