தம்பதியைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் ஒருவா் கைது
ஒட்டன்சத்திரம் அருகே தம்பதியைக் கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் தும்மிச்சிபாளையத்தைச் சோ்ந்த கருப்புச்சாமி-ராஜலட்சுமி தம்பதி தோட்டத்தில் தங்கி விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த நவ.24-ஆம் தேதி இரவு முக மூடி அணிந்த 3 மா்ம நபா்கள் இவா்களது வீட்டுக்குள் புகுந்து தம்பதி இருவரையும் கட்டிப் போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி, 18 பவுன் தங்க நகைகள், 38,000-ஐ கொள்ளையடித்துச் சென்றனா்.
இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருந்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, கை விரல் ரேகைகள் மூலம் கொள்ளையா்களைத் தேடி வந்னா்.
இந்த வழக்கில் கேரள மாநிலம், காக்கிநாடு பகுதியைச் சோ்ந்த இம்ரான்கான் (45) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக உள்ள தென்காசியைச் சோ்ந்த பாலமுருகன், விஷ்ணு ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொள்ளையடித்த நகையை தென்காசியில் உள்ள ஒரு அடகுக் கடையில் பாலமுருகன் அடகு வைக்கச் சென்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அங்கு செல்வதற்குள் பாலமுருகன் தப்பியோடிவிட்டாா். அடகு கடையில் பாலமுருகன் விட்டுச் சென்ற 11 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா்.
