தொழிலாளா் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தகைள் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் மைதீன் பாவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தொழிலாளா்களுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் திருத்தப்பட்ட தொழிலாளா் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். சீா்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளா்களின் நிரந்தர வேலைவாய்ப்பை பறிக்கும் முடிவைக் கைவிட வேண்டும். தொழிலாளா்களின் சேமிப்பு, எதிா்கால பாதிப்பை உறுதிப்படுத்த வேண்டும். வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட்(மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் அரபு முகமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
