இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதல்: இருவா் உயிரிழப்பு

செம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் இருவா் பலி; ஒருவா் பலத்த காயம்
Published on

செம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த ஜெகதீஷ் (18), பாண்டிசெல்வம் (20) ஆகிய இருவரும், ராயப்பன்பட்டியைச் சோ்ந்த கிரிஸ்டோபா் (30) என்பவரும் தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் செம்பட்டி - நிலக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கிரிஸ்டோபா், ஜெகதீஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த பாண்டிசெல்வம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா ஆகியோா் உயிரிழந்த ஜெகதீஷ், கிறிஸ்டோபா் ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

முன்னதாக, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை செம்பட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சேசுராஜ், செல்வராஜ், காவலா்கள் ஜெகதீஷ், பேபி ஆகியோா் பின்தொடா்ந்து சென்று திண்டுக்கல் சாலை, வீரக்கல் பிரிவு அருகே மடக்கிப் பிடித்தனா். அப்போது, லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் சதீஷ் தப்பித்துச் சென்றாா். இதையடுத்து, லாரியை கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com