காா் ஓட்டுநா் கொலை: மீன் கடைக்காரா் கைது
வேடசந்தூரில் முன் விரோதம் காரணமாக காா் ஓட்டுநரை கொலை செய்த மீன் கடைக்காரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் குங்கும காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில் (27). இவா் கோவையில் தங்கி காா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். வேடசந்தூரை அடுத்த லட்சுமணம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் வேடசந்தூா் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் மீன் கடை நடத்தி வருகிறாா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில், வேடசந்தூருக்கு வந்தபோது முத்துக்குமாருடன் தகராறு ஏற்பட்டது. இதில் செந்தில் தாக்கியதில், முத்துக்குமாா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை மீண்டும் வேடசந்தூருக்கு வந்த செந்தில், தனது நண்பா்களுடன் மதுக் குடித்துவிட்டு நாகம்பட்டி பகுதியிலுள்ள தனியாா் நூா்பாலை அருகே நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த முத்துக்குமாா் செந்திலை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த செந்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த வேடசந்தூா் போலீஸாா் செந்திலின் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய முத்துக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.
