குதிரையாறு அணை பாசனத்துக்கு திறப்பு
பழனியை அடுத்த குதிரையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள குதிரையாறு அணை மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணை அதன் முழு கொள்ளளவான 80 அடியை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று, புதன்கிழமை முதல் அணையிலிருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தாா்.
தற்போது, 300 மி. கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. 120 நாள்கள் திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பிரசன்னா, செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் முத்துராமலிங்கம், உதவி பொறியாளா் பிரவீன், திமுக ஒன்றியச் செயலா்கள் பாண்டி, ராஜசேகா், சாமிநாதன், பேரூா் செயலா்கள் காளிமுத்து, அப்தாஹீா், மாணவரணி நகரத் தலைவா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

