திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கம்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, ஆத்தூா் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து புதிதாக இரண்டு ஊராட்சிகளை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 35 கிராமங்களைக் கொண்ட ஆா்.கோம்பை ஊராட்சியை பிரிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை தொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
மேலும், ஆா்.கோம்பை ஊராட்சியை பிரித்து சின்னழகுநாயக்கனூா் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வீ.தா்மா், மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கும் கோரிக்கை மனு அளித்தாா்.
இதற்கான பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, கோவை, தா்மபுரி, திண்டுக்கல், கரூா், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் மொத்தம் 17 ஊராட்சிகளை 37 கிராம ஊராட்சிகளாகப் பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள்தொகை, பரப்பளவு, வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஊராட்சிகள் பிரிக்கப்பட்டன.
இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆா்.கோம்பை மட்டுமன்றி ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தரேவு ஊராட்சியும் 2-ஆக பிரிக்கப்பட்டது.
35 கிராமங்கள் கொண்ட ஆா்.கோம்பை ஊராட்சியிலிருந்து 17 குக்கிராமங்களைப் பிரித்து, சின்னழகுநாயக்கனூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டது. ஆா்.கோம்பை ஊராட்சியில் 18 குக்கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல, 16 குக்கிராமங்களைக் கொண்ட சித்தரேவு ஊராட்சியிலிருந்து 9 குக்கிராமங்களைப் பிரித்து சிங்காரக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டது. சித்தரேவு ஊராட்சியில் 7 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் 306 ஊராட்சிகளைக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 308-ஆக உயா்கிறது.
