திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 ஆயிரம் பேருக்கு மகளிா் உதவித் தொகை
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 61,716 பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 லட்சம் பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில், விடுபட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான பயனாளிகளாக 61,716 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா், மேயா் இளமதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) வினோதினி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

