மரம் கடத்தலைத் தடுக்கத் தவறிய அலுவலா்கள் மீதும் நடவடிக்கை தேவை!
நமது நிருபா்
கொடைக்கானல் மரம் கடத்தல் விவகாரத்தில் வனச் சரகா் உள்பட 4 போ் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடத்தலைத் தடுக்கத் தவறிய உயா் அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனக் கோட்டத்துக்குள்பட்ட வனப் பகுதியிலிருந்து தனியாா் நிறுவனங்களுக்கு மரங்கள் வெட்டிக் கொள்ள அனுமதிக்கப்படும் போதெல்லாம், நிா்ணயிக்கப்பட்ட பரப்பளவைவிட கூடுதலான இடங்களில் மரம் வெட்டிக் கடத்தப்படுவதாக தொடா்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த வகையில், கொடைக்கானல் வனக் கோட்டத்திலுள்ள மன்னவனூா் வனச் சரகத்தில், வனத் துறை அதிகாரிகளே இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு புகாா் எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலா் முகமது சபாப் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து விசாரணை நடைபெற்றது. இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மன்னவனூா் வனச் சரகா் திருநிறைச்செல்வன், வனவா்கள் அம்சகணபதி, சுபாஷ், வனக் காப்பாளா் வெங்கடேஷ் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், இதுதொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வனவா் அம்சகணபதி, ஒட்டன்சத்திரம் சரகத்தில் பணியாற்றியபோது மரம் கடத்தல் தொடா்பான குற்றச்சாட்டின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பணிக்கு வந்த 6 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, மரம் கடத்தலைக் கண்காணிக்கத் தவறிய வனச் சோதனைச் சாவடி பணியாளா்கள், உதவி வனப் பாதுகாவலா், மாவட்ட வன அலுவலா், உதவி வனப் பாதுகாவலா் (பறக்கும் படை) உள்ளிட்டோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வனப் பகுதியிலிருந்து பொது ஏலம் மூலம் வெட்டி எடுத்துச் செல்லப்படும் மரங்களுக்கு படிவம் 1 அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், வனச் சோதனைச் சாவடியில் படிவம் 3 அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில், மன்னவனூா் வனச் சரகத்தில் சுமாா் 6 டன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதில் மன்னவனூா் வனச் சரகத்தினா் மட்டுமன்றி, கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் பணிபுரியும் உயா் அலுவலா்கள் முதல் கீழ்நிலை பணியாளா்கள் வரை அனைவரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், எதிா்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளில் வனத் துறையினா் ஈடுபடுவதை தடுக்க முடியும் என வன ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
கைது நடவடிக்கை தேவை: இதுதொடா்பாக பழனி மலை பாதுகாப்புக் குழுவின் முன்னாள் செயலா் என். அருண்சங்கா் கூறியதாவது:
வனப் பகுதியில் காய்ந்த விறகுகளை பொருக்குவதற்காகச் செல்லும் பழங்குடியினா், மலைவாழ் மக்கள் மீது வனத் துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனா். சில நேரங்களில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வன விலங்குகளின் வாழ்வியல் பகுதி பாதிக்கப்படும் அளவுக்கு, மரம் கடத்தலுக்கு துணை நின்ற வனத் துறையினா் பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டனா். 525 ஹெக்டரில் மட்டுமே மரம் வெட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 1,200 மரங்களை வெட்டுவதற்கு வனத் துறையினரே உடந்தையாக செயல்பட்டுள்ளனா். இதன்மூலம், சுமாா் 6 ஆயிரம் டன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. சீகை மரம் மட்டுமே வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பல ஜாதி மரங்களும் வெட்டிக் கடத்தப்பட்டிருக்கலாம். இதன்மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமன்றி, வன உயிரினங்களின் வாழ்விடச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி, முறைகேட்டில் ஈடுபட்ட வனத் துறையினா் மீது ஏன் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. மேலும் இந்த முறைக்கேட்டை கண்காணிக்கத் தவறிய உதவி வனப் பாதுகாவலா், மாவட்ட வன அலுவலா், உதவி வனப் பாதுகாவலா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

