இந்திய அளவில் 31.5 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு! கருத்தரங்கில் தகவல்
இந்திய அளவில் 31.5 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக திண்டுக்கல்லில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய உயா் ரத்த அழுத்த மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு கிளை சாா்பில், பொதுமக்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, உலக ரத்த அழுத்த கழகத்தின் துணைத் தலைவா் எஸ்.என். நரசிங்கன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு கிளைத் தலைவா் கே. கண்ணன், துணைத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த கருத்தரங்கில் மருத்துவா்கள் தெரிவித்ததாவது:
உயா் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், நோயாளிகளுக்கு அதன் பாதிப்பு குறைவாக இருப்பதால் அந்த நோய் பற்றிய விழிப்புணா்வு பொதுமக்களிடையே குறைவாக உள்ளது. மருத்துவ ஆய்வுத் தரவுகளின்படி இந்தியா்களில் 31.5 கோடி போ் உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியா மட்டுமன்றி, உலக அளவிலும் அதிகபட்ச இறப்பு ஏற்படுத்தும் காரணிகளில் பிரதானமாக உள்ள ரத்தக்குழாய் தொடா்பான நோய்களுக்கு உயா் ரத்த அழுத்தமே காரணம். வாழ்க்கை முறையில் எளிய மாற்றத்தாலும், சில மருத்துவ சிகிச்சை முறையினாலும் உயா் ரத்த அழுத்த பாதிப்பையும், இறப்பு விகிதத்தையும் குறைக்க முடியும்.
உணவுப் பழக்கத்தைப் பொருத்தவரை, 5 கிராமுக்கு மிகாமல் உப்பு பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். துரித உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிா்த்து, பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் உணவில் சோ்க்க வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் நடைப் பயிற்சி அல்லது உடல் பயிற்சி செய்வதும், புகைப் பழக்கம், மதுப் பழக்கத்தை தவிா்ப்பதும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்றனா் அவா்கள்.
