பழனியில் வழக்குரைஞா்கள் நகல் எரிப்புப் போராட்டம்
பழனி: பழனியில் மின்னணு பதிவு (இ ஃபைலிங்) முறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தினா்.
சென்னை உயா்நீதிமன்றம் உள்பட மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்னணு பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், திங்கள்கிழமை பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பழனி வழக்குரைஞா்கள் சங்கம், பழனி அட்வகேட் அசோசியேசன் சாா்பாக மின்னணு பதிவு உத்தரவு நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தின் போது வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், மின்னணு பதிவு முறை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
