கொடைக்கானலில் உறைபனி: பொதுமக்கள் அவதி
கொடைக்கானலில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் காணப்பட்ட உறைபனியால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் காற்றுடன் பனிப் பொழிவும் நிலவியது. இதனிடையே நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து ‘ஜீரோ டிகிரி’க்கு சென்று உறைபனி நிலவியது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பெரும் அவதியடைந்தனா்.
மேலும், புல்வெளிகளில் பனித்துளிகள் படா்ந்திருந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது பனி உறைந்து காணப்பட்டது.
இதேபோல, பாம்பாா்புரம், ஜிம்கானா பகுதி, அப்சா்வேட்டரி, ஏரிச்சாலைப் பகுதி, அட்டக்கடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொட்டிச் செடிகள், பாத்திரங்களில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீா் உறைந்து பனிக்கட்டியாக மாறியது.
இந்த நிலையில், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் பகல் நேரங்களிலும் தீ மூட்டி குளிா் காய்கின்றனா். இதனிடையே உறைபனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நகா்ப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

