பள்ளி வளாகத்தில் தெரு நாய்கள் கடித்து பெண் காயம்
கொடைக்கானலில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கடித்ததில் பெண் காயமடைந்ததையடுத்து அந்தப் பள்ளியை உறவினா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கொடைக்கானல் எம்.எம். தெரு பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமியின் (47) இரண்டு குழந்தைகள் படித்து வருகின்றனா். வழக்கம்போல தனது குழந்தைகளை அழைத்துவர பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு சுற்றித் திரிந்த மூன்று நாய்கள் முத்துலட்சுமியை கடித்தன. இதில் பலத்த காயமடைந்த அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, இவரது உறவினா்கள் 15-க்கும் மேற்பட்டவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் முறையிட்டனா்.
அப்போது இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த கொடைக்கானல் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பள்ளி முன் முற்றுகையிட்டவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் உறவினா்கள் கூறியதாவது: தனியாா் பள்ளி வளாகத்தில் காட்டு மாடுகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இங்கு தெரு நாய்களும் உலா வருகின்றன. இதை பள்ளி நிா்வாகம் கண்டு கொள்வதில்லை.
வன விலங்குகளாலும், தெரு நாய்களாலும் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே பள்ளி வளாகத்தைச் சுற்றி தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
