ஜல்லிக்கட்டு: நிபந்தனைகளை தளா்த்தக் கோரிக்கை
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி, திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 2026-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த சில நிபந்தனைகளைத் தளா்த்த வேண்டும்.
குறிப்பாக, காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் இணைய வழியில் பதிவு செய்து முன்னனுமதி (டோக்கன்) பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். விழா ஏற்பாட்டாளா்கள் மூலம் அனுமதி வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். காளை உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் அரசு சாா்பில் நல வாரியம் அமைத்துத் தர வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் வடமாடு, வாடி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

