பேரிஜம் சாலையில் குட்டியுடன் புலி நடமாட்டம்
கொடைக்கானல் பேரிஜம் சாலையில் குட்டியுடன் புலி நடமாடி வருவதால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சத்தில் உள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சுற்றுலாத் தலமான பேரிஜம் பகுதிக்கு வனத் துறையினரின் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில், பேரிஜம் பகுதியிலுள்ள மதிகெட்டான் சோலை, அமைதிப் பள்ளத்தாக்கு, தொப்பி தூக்கும் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் சிலா் வாகனத்தில் திங்கள்கிழமை சென்றனா்.
அப்போது, பேரிஜம் செல்லும் பகுதியில் குட்டியுடன் புலி சென்றதைப் பாா்த்து வாகனத்தை நிறுத்தி புகைப்படமும் எடுத்தனா். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மன்னவனூா் மலைச் சாலையில் புலி நடமாட்டம் இருந்ததை அந்தப் பகுதி மக்கள் பாா்த்தனா். இதேபோல, அதே பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கருஞ்சிறுத்தை நடமாட்டத்தையும் பாா்த்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தற்போதுதான் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
மேல்மலைக் கிராம விவசாயத் தோட்டங்களில் கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால், அவா்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவற்றின் நடமாட்டத்தைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

