ஒட்டன்சத்திரம் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

ஒட்டன்சத்திரம் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

ஒட்டன்சத்திரம் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலக சங்கத்தினா் புகாா்
Published on

ஒட்டன்சத்திரம் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் சிவராஜ் (45). தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சிபிராஜ் என்பவா் ஒட்டன்சத்திரம் நகராட்சி 2-ஆவது வாா்டு நாகணம்பட்டியில் உள்ள நிலத்துக்கு தனது பெயரை கூட்டாகச் சோ்க்க வலியுறுத்தி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தாா். இதுதொடா்பாக அந்த நிலத்தை நேரடியாகக் கள ஆய்வு செய்த கிராம நிா்வாக அலுவலா் சிவராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியரிடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா்.

இந்த நிலையில், நாகணம்பட்டியைச் சோ்ந்த நல்லசாமி மகன்கள் கண்ணன், கோபி ஆகியோா் கைப்பேசியில் சிவராஜை தொடா்புகொண்டு எங்களுக்குச் சாதகமாக அறிக்கை கொடுக்க வேண்டும் என தரக்குறைவாக பேசி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிவராஜ் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம உதவியாளா் நலச்சங்கம் சாா்பில் ஒட்டன்சத்திரம் கிளைத் தலைவா் வரதராஜன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயனிடம் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணிப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும் புகாா் அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com