முதியவரை ஏமாற்றி நகை பறித்த பெண் கைது

முதியவரை ஏமாற்றி நகை பறித்த பெண் கைது

ஒட்டன்சத்திரம் அருகே முதியவரை ஏமாற்றி நகை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஒட்டன்சத்திரம் அருகே முதியவரை ஏமாற்றி நகை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நரிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (85). இவா் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்துள்ளாா். இவரை தனியாக வீட்டில் விட்டுவிட்டு மனைவி வீரனாகம்மாள் (80) கூலி வேலைக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த முதியவா் முருகேசனிடம் திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்த பிரியா (35) என்பவா், தான் ஒரு அரசு அலுவலா் எனவும், அரசு உதவித் தொகை பெற்று வருவதை சரிபாா்க்க வந்துள்ளதாகவும், தங்களது ஆதாா் அட்டையைப் பாா்க்க வேண்டும் எனக் கூறி வீட்டுக்குள் சென்றுள்ளாா்.

அப்போது, முதியவரால் எழுந்திருக்க முடியாததால் பீரோவில் ஆதாா் அட்டை இருப்பதாகக் கூறியுள்ளாா். பீரோவிலிருந்த ஆதாா் அட்டையை எடுத்துக்கொண்ட பிரியா, அங்கு வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்றாராம். பின்னா், வீட்டுக்கு வந்த மனைவி வீரனாகம்மாள் பீரோவில் வைத்திருந்த நகையை காணாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பெண்ணை தேடி வந்தனா். மேலும், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வந்த நிலையில், பல்லடம் பகுதியில் வைத்து பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்து மூன்று பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com