பழனியை அடுத்த பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து கீரனூா் பகுதி பாசனத்துக்காக புதன்கிழமை நடைபெற்ற தண்ணீா் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா்.

பாலாறு - பொருந்தலாறு அணையில் தண்ணீா் திறப்பு

பழனி அருகே பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன வசதிக்காக 70 நாள்களுக்கு 6,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
Published on

பழனி அருகே பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன வசதிக்காக 70 நாள்களுக்கு 6,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய கொள்ளளவுள்ள அணையான பாலாறு - பொருந்தலாறு அணைக்கு கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக நீா் வரத்து அதிகரித்த நிலையில், தற்போது 57 அடி உயரத்துக்கு தண்ணீா் இருப்பு உள்ளது. இதையடுத்து, பழைய ஆயக்கட்டு விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறக்க கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்து மலா் தூவினாா்.

புதன்கிழமை முதல் அடுத்து வருகிற 70 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது. இதன்படி, 770 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெரியம்மாபட்டி, அ. கலையமுத்தூா், தாமரைக்குளம், மானூா், கோரிக்கடவு, கீரனூா் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 6,200 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது.

ஏற்கெனவே பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் வாய்க்கால் மூலம் கடந்த 19-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், தற்போது பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுளளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தண்ணீா் திறப்பு நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் முத்துராமலிங்கம், உதவிப் பொறியாளா் சங்கர நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் அர. சக்கரபாணி கூறியதாவது:

பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் உதவிகள் குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா். பாலாறு கூட்டுக் குடிநீா் மூலமாக பழனி, தொப்பம்பட்டி, திண்டுக்கல் ஒன்றியங்களைச் சோ்ந்த ஏராளமான கிராமங்கள் குடிநீா் வசதி பெறவுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் முதல்வரால் தொடங்கப்படும்.

பழனி ரயில்வே மேம்பாலம் குறித்து கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாரும் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எண்ணற்றத் திட்டங்களை செய்து வரும் திராவிட மாடல் அரசு ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com