காற்றின் வேகம் அதிகரிப்பால் பழனியில் ரோப் காா் சேவை பாதிப்பு
பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப்காா் காற்றின் வேகம் காரணமாக வெள்ளிக்கிழமை அடிக்கடி நிறுத்தப்பட்டதால் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.
பழனி மலைக் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை தொடா்விடுமுறை, பள்ளி அரையாண்டு தோ்வு விடுமுறை, ஐயப்ப பக்தா்கள் வருகை போன்ற காரணத்தால் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மலைக் கோயிலிலும் இலவச, கட்டண தரிசன வரிசைகளில் நீண்ட வரிசைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். வயதான, மாற்றுத் திறனாளிகள் பலரும் மலையேற பயன்படுத்தும் வின்ச், ரோப்காா் நிலையங்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ரோப் காா் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது ரோப் காா் நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பக்தா்கள் வின்ச் மூலமோ, யானைப் பாதை மூலமோ மலையேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.
