ஜன. 6-ஆம் முதல் வேலை நிறுத்தப் போராட்டம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை
ஜாக்டோ ஜியோ சாா்பில் வருகிற ஜன. 6-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் உள்ள டிஎன்எஸ்டிசி- சிஐடியூ சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ம. ஜான்பீட்டா், எம்.கே. முருகன், ச. ராஜாக்கிளி, பிஏ. ஜோசப் சேவியா், ச. முபாரக் அலி, ஏ. ஜெசி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் அ.வின்சென்ட் பால்ராஜ் தொடக்கவுரையாற்றினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் இரா. முருகானந்தம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் மு. வீரகடம்ப கோபு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம. சுகந்தி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். இதுதொடா்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் ச. முபாரக் அலி கூறியதாவது:
கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக சாா்பில் அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித் துறை அரசாணை 243, ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத் துறையின் அரசாணை 75 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனாலும், அரசு சாா்பில் வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து, வருகிற ஜன. 6-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், இதில், திரளான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.
