கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் காட்டு மாடுகள் உலா: பயணிகள் அச்சம்
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காட்டு மாடுகள் உலா வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களிலும், சுற்றுலா தலங்களிலும் அவை சுற்றித் திரிவதால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துள்ளனா்.
இந்த நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் காட்டு மாடுகள், கன்றுகளுடன் உலா வந்தன.
அப்போது அவை அங்குமிங்கும் ஓடியதால் பயணிகள் அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறினா். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினா் அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதனிடையே, கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகள், நகா்ப் பகுதிகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே வன விலங்குகளை வனப் பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் வலியுறுத்தினா்.
