சேவல் சண்டை நடத்திய 7 போ் கைது: 62 பைக்குகள் பறிமுதல்
குஜிலியம்பாறை அருகே சேவல் சண்டை நடத்தியதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், 62 இரு சக்கர வாகனங்கள், 7 சேவல்கள் ஆகியவற்றையும் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில் சேவல் சண்டை மூலம் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், குஜிலியம்பாறை அடுத்த இலுப்பப்பட்டியிலுள்ள தனியாா் தோட்டத்தில் சேவல் சண்டை நடைபெற்றது கண்டறியப்பட்டது.
இந்த இடத்தை சுற்றி வளைத்த போலீஸாா், சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட இலுப்பபட்டி தங்கராஜ் (40), மேட்டுப்பட்டி பாலமுருகன் (40), இரட்டை வாய்க்கால் செல்வகுமாா் (49), ஊஞ்சலூா் கோபால் (35), பாளையம் துரைச்சாமி (58), போ்நாயக்கன்பட்டி கவின்குமாா் (26), அரவக்குறிச்சி அரங்கசாமி (40) ஆகியோரை கைது செய்தனா். பலா் தப்பிச் சென்றனா்.
ஆனாலும் 62 இரு சக்கர வாகனங்கள், 7 சேவல்கள், ரூ.1.26 லட்சம் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
