இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 100-க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் சத்யவாணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கணேசன், தேனி மாவட்டச் செயலா் கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நான்கு சாலையில் தொடங்கி ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள், ஆங்கிலேயா் அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், பூமிதான நிலங்களை மீட்டு அந்தந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கே தலா இரண்டு சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் ஜெயபிரகாஷ் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
