2.6 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஓராண்டாக பறிமுதல் செய்யப்பட்ட 2.6 டன் புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
Published on

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஓராண்டாக பறிமுதல் செய்யப்பட்ட 2.6 டன் புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தடையை மீறி விற்பனை செய்யப்படும் புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த வகையில், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்படும் புகையிலைப் பொருள்கள், நீதிமன்ற வழக்குகளுக்காக குறிப்பிட்ட காலம் பாதுகாக்கப்படுவது வழக்கம். இதேபோல, பேருந்துகள், ரயில்களில் கடத்தி கொண்டுவரப்படும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, உணவுப் பாதுகாப்புத் துறையிடமே ஒப்படைத்து வருகின்றனா்.

திண்டுக்கல், சாணாா்ப்பட்டி, அம்பாத்துரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழிப்பதற்கு உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் திண்டுக்கல் 3-ஆது நீதித் துறை நடுவா்மன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழிக்க நீதித் துறை நடுவா் ஆனந்தி அனுமதி வழங்கினாா். இதன்பேரில், 2.6 டன் புகையிலைப் பொருள்களை காவல் துறை பாதுகாப்புடன் முருகபவனம் பகுதியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறையினா், அவற்றை குழியில் கொட்டி அழித்தனா்.

X
Dinamani
www.dinamani.com