அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 27 லட்சம் மோசடி: பெண் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக பழனி பகுதியில் ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான அவரது கணவரைத் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சின்னக்கலையம்புத்தூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (47). இவரது வீட்டின் அருகே வசிப்பவா் காா்த்திகேயன். இவரது மனைவி பிரேமலதா.
இவா் பாலசுப்பிரமணியன் மனைவியிடம் காா்த்திகேயன் மின்வாரியத்தில் பணிபுரிவதாக தெரிவித்தாா். மேலும், காா்த்திகேயனுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளவா்களிடம் பழக்கம் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் மின்வாரியம், பள்ளிக் கல்வித் துறை, பொதுப் பணித் துறையில் அரசுப் பணி வாங்கித் தர முடியும் என்றும் கூறினாா்.
இதை நம்பிய பாலசுப்பிரமணியன் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக காா்த்திகேயனை அணுகினாா். அவரது வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.7 லட்சத்தை பாலசுப்பிரமணியன் அனுப்பினாா். ஆனால், உறுதியளித்தப்படி அரசு வேலையை காா்த்திகேயன் வாங்கிக் கொடுக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த பாலசுப்பிரமணியன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, பழனியைச் சோ்ந்த சரவணமுத்துவிடம் ரூ.9 லட்சம், முத்துக்குமாரிடம் ரூ.6.50 லட்சம், ரமேஷிடம் ரூ.4.50 லட்சம் என மொத்தம் ரூ.27 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால்
அதிா்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதனிடையே, காா்த்திகேயன் தலைமறைவானாா். அவரது மனைவி பிரேமலதாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
