கொடைக்கானல் அண்ணா சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்ற கோரிக்கை
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சலைல, செவண் ரோடு சாலை ஆகியவற்றை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் பிரதான சாலையான அண்ணா சாலையில் காவல் நிலையம், வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதிகளிலுள்ள தனியாா் தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை அண்ணா சாலைப் பகுதிகளில் நிறுத்தி விடுகின்றனா். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, அண்ணா சாலைப் பகுதி, பேருந்து நிலையம் எதிரே செவண்ரோடு செல்லும் சாலை ஆகிய சாலைகள் ஒரு வழிப்பாதையாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி, உணவக உரிமையாளா்கள் உரிய இடங்களைத் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது குறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது: கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்துபவா்கள் தங்களது வாகனங்களை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்த வேண்டும். இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறையினா் அனுமதிக்கக் கூடாது.
சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வரும் நேரங்களில் அண்ணா சாலைப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் லாரியை நிறுத்தி தண்ணீா் விநியோகம் செய்வதை தவிா்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் அல்லது அதிகாலையில் தண்ணீா் விநியோகம் செய்யலாம். பொதுவாக ஒரு வழிப் பாதையாக அண்ணா சாலைப் பகுதியை மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனா்.

