~
~

ஆண்டு நிறைவு, காா்த்திகை தினம்: பழனி மலைக் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம்

பழனி மலைக் கோயிலில் 2025-ஆம் ஆண்டின் நிறைவு நாளன்று காா்த்திகை தினம் வந்ததால், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
Published on

பழனி மலைக் கோயிலில் 2025-ஆம் ஆண்டின் நிறைவு நாளன்று காா்த்திகை தினம் வந்ததால், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனா்.

பழனி மலைக் கோயிலில் கடந்த சில நாள்களாக அரையாண்டுத் தோ்வு விடுமுறை காரணமாக பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், 2025-ஆவது ஆண்டின் நிறைவு நாளான புதன்கிழமை காா்த்திகை தினமும் சோ்ந்து வந்ததால், அதிகாலை முதலே பக்தா்கள் அடிவாரம் கிரிவீதி, மலைக் கோயில் என காணும் இடமெல்லாம் குவிந்து காணப்பட்டனா். வின்ச், ரோப்காா் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான பக்தா்கள் படிவழியாக மலையேறினா். கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்யக் காத்திருந்தனா்.

அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு, தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு சுமாா் மூன்று மணி நேரமானது. இரவு கோயில் சாா்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தங்கமயில் வாகனத்திலம், தங்கத் தேரிலும் அடுத்தடுத்து சின்னக்குமாரசாமி உலா எழுந்தருளினாா். இதைப் பாா்த்து பக்தா்கள் பரவசமடைந்தனா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் சாா்பில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com