பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு தலித் விடுதலை இயக்கம் குற்றச்சாட்டு
பட்டியல், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் கருப்பையா தெரிவித்தாா்.
வன்கொடுமை சட்டத்தின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட நிவாரணங்களை முறையாக வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த கருப்பையா, செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள்அதிகரித்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 1,097 வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிலக்கோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் படுகொலை சம்பவங்களும், திண்டுக்கல் அருகே சிறுமி ஒருவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறை சம்பவமும், மாங்கரையில் பட்டியலின மக்கள் 4 போ் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, வழங்க வேண்டிய இழப்பீடு, ஓய்வூதியம், கல்வி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நிவாரணங்கள் வழங்கப்படாமல் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலட்சியமாக செயல்படுகிறது.
எனவே, சம்மந்தப்பட்ட அலுவலா் மீது மாவட்ட நிா்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல்களை கண்டிக்கும் வகையில், ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் நாளில் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
