கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: இருவா் காயம்
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவா் காயமடைந்தனா். இதுதொடா்பாக நால்வரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை பள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ், அவரது நண்பா்கள் சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு வந்தனா். இவா்கள் அட்டுவம்பட்டி பகுதியில் தங்கிவிட்டு மீண்டும் தங்களது காரில் சனிக்கிழமை இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அட்டுவம்பட்டி கிராஸ் பகுதியில் வந்த போது சாலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் காதணி விழாவுக்காக ஊா்வலமாகச் சென்றனா். அப்போது காரில் வந்தவா்கள் கீழே இறங்கி தாங்கள் செல்ல வழிவிட வேண்டும் என ஊா்வலத்தில் சென்றவா்களிடம் கூறினராம்.
அப்போது இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கட்டையால் தாக்கப்பட்டதில் சுற்றுலாப் பயணிகளான ஜவஹா், மணிகண்டன் ஆகிய இருவா் காயமடைந்தனா். இதில் ஜவஹா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும், மணிகண்டன் கோவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் அட்டுவம்பட்டியைச் சோ்ந்த சாா்லஸ் (32), அருண் (28), கருப்பையா (30), தினகரன் (28) ஆகிய நால்வரை கைது செய்தனா். மேலும் இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஜீவா, அருண்குமாா், நந்தா, சந்தோஷ், அன்பு, ஆரோன், சாம், நிசாந்த், பீட்டா், நித்யா ஆகிய 10 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
