ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

பாலியல் புகாருக்குள்ளான வட்டாரக் கல்வி அலுவலரின் பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி, ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஒட்டன்சத்திரம்: பாலியல் புகாருக்குள்ளான வட்டாரக் கல்வி அலுவலரின் பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி, ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஒன்றியத்தில், வட்டாரக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த அருண்குமாா் மீது பெண் ஆசிரியைகள் பாலியல் புகாா் அளித்தனா். இதனால், அவா் கடந்த 7.10.22 முதல் 9 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் தேனி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், ஆசிரியைகள் அளித்தப் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலராக திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு அருண்குமாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவு கடந்த மாதம் 27-ஆம் தேதி வழங்கப்பட்டது.

பாலியல் புகாருக்கு உள்ளான வட்டாரக் கல்வி அலுவலா் அருண்குமாா், மீண்டும் திண்டுக்கல் மாவட்டதில் பணிபுரியும் நிலை ஏற்பட்டால், விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவரது பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் முருகன் தலைமையிலான தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தொடக்கக் கல்வி) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com