சலவைத் தொழிலாளி மீது தாக்குதல்: முடித்திருத்துபவா் மீது புகாா்
திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே சலவைத் தொழிலாளியை கத்தியால் குத்திய முடித்திருத்துபவா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த ஒட்டநாகம்பட்டியைச் சோ்ந்தவா் முனியப்பன் (47). இவா் சீத்தமரம் 4 சாலை பகுதியில் சலவையகம் நடத்தி வருகிறாா். இவா், தனது சலவையகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு முடித் திருத்தம் செய்வதற்காக, சீத்தமரம் 4 சாலையிலுள்ள மோகன் (43) என்பவரது முடித்திருத்தகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிவைத்தாா்.
முடித்திருத்தத்துக்காக சென்றவா்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், முனியப்பன் அவா்களை தேடிச் சென்றாா். 2 மணி நேரமாக காத்திருக்க வைத்தது குறித்து மோகனிடம், முனியப்பன் கேட்டாா். ஆனால், வாடிக்கையாளா்கள் இல்லாத நேரத்தில் மட்டுமே உனது ஊழியா்களுக்கு முடித்திருத்தம் செய்ய முடியும் என மோகன் கூறினாராம். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மோகன் தனது கையில் இருந்த சவரக் கத்தியால் முனியப்பனைத் தாக்கினாா். இதில் கன்னத்தில் காயமடைந்த முனியப்பன் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
