வேடசந்தூா் தொகுதியில் 12 ஆயிரம் இரட்டை வாக்குப் பதிவுகள்: முன்னாள் எம்எல்ஏக்கள் புகாா்
வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 12,213 இரட்டை வாக்குப் பதிவுகள் குறித்து வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விபிபி.பரமசிவம், தென்னம்பட்டி எஸ்.பழனிச்சாமி ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ.சரவணனிடம் கோரிக்கை மனு அளித்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விபிபி.பரமசிவம், தென்னம்பட்டி எஸ்.பழனிச்சாமி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டின் 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆளுங்கட்சியான திமுக எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2.74 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். கடந்த ஒரு மாத காலமாக வேடசந்தூா் தொகுதி முழுவதும் அதிமுகவினா் நடத்திய ஆய்வில், 12,213 இரட்டை வாக்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டன. மேலும், சில இடங்களில் ஒரே நபா் 3 இடங்களில் வாக்குரிமை பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கான முழு விவரங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம்.
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளின்போது, இந்த இரட்டை வாக்குப் பதிவுகள் நீக்கப்பட்டு, நியாயமான முறையில் புதிய வாக்காளா்கள் சோ்ப்பு, சரிபாா்ப்பு பணிகள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனா் அவா்கள்.
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் மலா்வண்ணன், ஜான்போஸ், லட்சுமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

