வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ.சரவணன் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி பல்வேறு கட்டங்களாக வரும் 2026 ஆண்டு, பிப்.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பணிகளுக்கான கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,124 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி பதிவு அலுவலா்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

மேலும், வாக்காளா்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் உரிய விளக்கம் அளித்த வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் வி.மூ.திருமலை, மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன், வட்டாட்சியா்கள் சுல்தான் சிக்கந்தா், பாண்டியராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com